Vaagai Women's club IWD 2025 Intro speech

 அனைவருக்கும் வணக்கம்!


அன்பும் அக்கறையும் நிறைந்த வாகை பெண்கள் மன்றத்தின் மகளிர் தின விழாவிற்காக, 

இன்று இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும், என் இதயப்பூர்வமான வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!


2006 இல் தொடங்கப்பட்ட நம் crawley தமிழ் கல்விக் கூடத்தின் ஒரு முக்கிய பொறுப்பு சமூக வளர்ச்சிக்கு உதவுவதாகும்.  அந்த பொறுப்பின் முக்கிய வெளிப்பாடாகவே 5 ஆண்டுகளுக்கு முன் நம் வாகை மகளிர் மன்றம் தொடங்கப் பட்டது.


பிறப்பில் இருந்து தொடங்குவோம்…


 மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல

     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!


என்று பெண்மையின் சிறப்பை கவிமணி மிக அழகாகப் பாடி இருக்கிறார். அந்த மா தவத்தின் அருமையை உணர்ந்து, ஒவ்வொரு பெண்ணையும் பாராட்டும் நாளாக இந்த மகளிர் தினத்தை நாம் மாற்றுவோம்.


கல்வி என்று வரும்போது பாரதியும் கூட, 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாடி இருக்கிறார். கடந்த 20-30 வருடங்களில் நாம் படிப்பில் பெரிய வளர்ச்சியை பெற்றிருந்தாலும் இன்னும் செல்ல வேண்டிய பாதை தூரம். 


முன்னேற்றம்:

மனித குலம் அறிவியல், தொழில் நுட்பத்தில் அதிவேகத்தில் முன்னேறுகிறது. செயற்கை நுண்ணறிவு, தானியங்கிகள், இணையம், சமூக ஊடகங்கள், எண்ம மயம் என நான்காம் தொழிற்புரட்சி நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.


2023-இன் ஐக்கிய ராச்சியத்தின் கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு 97 ஆண்களுக்கு 100 பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு பெரும்பான்மை வகிக்கும் பெண்களின் சவால்களை இந்த முன்னேற்றம் தீர்த்து விடவில்லை. 


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

என்ற பாரதி கூற்றிற்கு ஏற்றபடி,  எந்த சவால் வந்த போதிலும், அதை எதிர் கொள்வோம் நாம்.


ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வளவு அமைதியாக, அன்புடனும், வலிமையுடனும் சமாளிக்கிறோம் தெரியுமா?

  • குடும்ப ஒற்றுமையை நிர்வகிக்க,
  • பிள்ளைகளின் கல்வி, வளர்ச்சி என ஒவ்வொரு துறையிலும உறுதியாக நிற்க,
  • பல நேரங்களில் குடும்பத்திற்கு வருமானம் தேடி உழைக்க
இவை அனைத்தும் ஒவ்வொரு மகளிரின் மிகப்பெரிய சாதனைகள்.


இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நம் பெண்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல், தமிழ் கல்வி கூடத்தில் நம் பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக் கொடுக்க தன்னார்வளர்களாக மற்றவர்களுக்கு உதவிகரம் நீட்டும் மனதையும் இன்று நாம் இங்கே கொண்டாடுகிறோம்.


பிறப்பிலேயே மன வலிமை பெற்ற நாம், உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாகை மன்றத்தின் யோகம், வரைதல், பாடுதல், கணினி கல்வியறிவு, மற்றும் இன்ன பிற நிகழ்வுகள் அனைத்திலும் பங்கு பெற்று நம் வாழ்வில் உயர்வோம்!


உங்கள் உயர்வுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.  ஒரு துணை கரமாக நாங்கள் உங்களுடன் பயணிப்போம்.


இன்றைய நிகழ்ச்சி ஒரு சிறப்பு நிகழ்ச்சி மட்டுமல்ல; நம் பெண்களின் பலம், பொறுமை, மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் அரங்கேற்றம்.

இன்று இங்கே கூடியுள்ள ஒவ்வொரு பெண்ணும், உங்கள் பலத்தையும் திறமையையும் எடுத்துக்காட்டுபவர்கள்.


பெண்களின் வெற்றியை, மன உறுதியை, வாழ்வின் அழகை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவதை விட சிறந்த மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? !


இவ்விழாவில், நீங்கள் அனைவரும்:
மகிழ்ச்சியாக விளையாட்டு போட்டிகள்,
🎶
மனம் மகிழ்விக்கும் கலை நிகழ்ச்சிகள்,
🍽️
சுவையான சிற்றுணவு,
இவையனைத்தையும் அனுபவிக்குமாறு அழைக்கிறோம்.


வாகை பெண்கள் மன்றத்தின் சார்பாக உங்களை அனைவரையும் மீண்டும் ஒருமுறை மனமார வரவேற்கிறேன் ! 🌸🌸🌸

வாழ்க பெண்கள் பெருமை! வாழ்க தமிழ்!

நன்றி

Comments